கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கான தடைநீக்கம் - சென்னை உயர்நீதிமன்றம்
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.
கோயம்புத்தூரில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வதேச விமானங்களை தரையிறக்குவது மிகவும் சிறமாக இருந்தது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்க விமான நிலையத்தின் அருகில் இருந்த நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது.
அப்போது முறையாக கருத்து கேட்கவில்லை தங்களது எதிர்ப்புகளை பரீசிலிக்கவில்லை, தங்களுடைய நிலத்திற்கு செல்ல பாதை கிடைக்காது என கோவை காளபட்டியைச் சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடந்துவந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர் எனவே தடைஉத்தரவை நீக்க வேண்டும் என அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கு நிலுவையில் உள்ளபோதே இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அரசு தெரிவித்ததை ஏற்று, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்