சார்ஜ் செய்யவே தேவையில்ல.. ஆயுசுக்கும் வாகனம் ஓட்ட முடியும்.. EV வரலாற்றில் புது புரட்சி!
செய்தியாளர் - கார்த்திகேயன்
பேட்டரி வாகனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வரத் தொடங்கிவிட்டன. இருப்பினும், ஒருசிலர் இந்த எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தயங்க ஒரு முக்கியமான காரணம் உள்ளது. அது சார்ஜிங் ஸ்டேஷன்கள்தான். வழக்கமான, வாகனங்கள் பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் நின்றுவிட்டால், அருகில் உள்ள பங்குகளில் எரிசக்தியை நிரப்பி மீண்டும் இயக்க முடியும்.
ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் அப்படியான பங்க் வசதிகள் பரவலாக இல்லை. எதிர்காலத்தில் நிறைய சார்ஜிங் ஸ்டேஷன்கள் வந்தாலும், முழு சார்ஜ் ஏறுவதற்கு பல நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறைச் சிக்கலை தீர்ப்பதற்காக, அருமையான புதிய ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதாவது, வாகனங்கள் பயணிக்கும்போதே, சாலைகளில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டு இயங்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர். தார் சாலைக்கு அடியில் 12 செ.மீ ஆழத்தில், சுமார் 60 சிறிய Coil-களைப் புதைத்து, அந்தச் சுருள்கள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு, பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சாலைகளையே சார்ஜிங் ஸ்டேஷனாக மாற்றுவதற்கு விஞ்ஞானிகள் முயற்சிகளை கையில் எடுத்துள்ளனர். வாகனம் மணிக்கு 80 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தாலும்கூட தேவையான மின்னாற்றல் 80%த்திற்கும் மேல் காரின் பேட்டரிக்கு வெற்றிகரமாக கடத்தப்பட்டு சார்ஜ் ஆகி விடுவதாக, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முறையில் சார்ஜ் செய்வதற்கு மின்காந்தங்கள் மூலம் இயங்கும் பேட்டரிகள் தேவைப்படுகின்றன. இவை வழக்கமான பேட்டரிகளைவிட விலை குறைந்தவை என்றும் சொல்லப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்குப் பயன்படும் இந்த ஸ்பெஷலான சுருள்களை ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனம்தான் உருவாக்கி வருகிறது.
இந்த சுருள்களை வாங்கிவிட்டு, தார் சாலைகளில் புதைத்துவிட்டாலே போதும் என்று கூறும் அந்த நிறுவனம், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களுக்குத்தான், இந்த தொழில்நுட்பம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. தானியங்கி வாகனங்களைத் தயாரிப்பவர்கள் வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் இந்த முறையின் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஏனென்றால், இதில் கேபிள்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டம் தற்போது சோதனை முயற்சியில்தான் உள்ளது.
முதற்கட்டமாக அதிக சரக்கு வாகனங்கள் செல்லும் பாதைகளில் மட்டுமே இவை பொருத்தப்படுகிறது. ஆனால், வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போதே வயரில்லாமல் சார்ஜ் செய்யும் இந்த தொழில்நுட்பம் எல்லா நாடுகளிலும் நடைமுறைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

