மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் முதல்வர் பழனிசாமி மனு
சென்னையில் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
தேசிய நெடுஞ்சாலை, நீர்வள மேலாண்மை மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சென்னை மதுரவாயல் துறைமுகம், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், பறக்கும் ரயில் உட்பட பல திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நீர்வள மேலாண்மை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலை பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கிய இந்த மனுவை முதல்வர் பழனிசாமி, அமைச்சர் நிதின் கட்கரியிடம் அளித்தார். மேலும் இந்த மனுவில் தெரிவித்துள்ள முழு விபரம் குறித்து விரைவில் மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.