வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை
வாக்காளர்கள் வாக்களிக்க போகும்போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்களோ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் வாக்குச் சேகரித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதனையும் மீறி வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது அதிமுக பிரமுகர் சம்பத் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க போகும்போது வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்தலாம் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.