பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு விவரங்கள் தற்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் தெரிய வந்துள்ளது.
அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வேட்புமனுவில் அன்புமணி இதனை குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. இது தவிர, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் மீது மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன.
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட இந்தூர் பகுதியில் 2010ஆம் ஆண்டில் அனுமதியின்றி கூட்டம் கூடியது மற்றும் தரக்குறைவாக பேசியதாகவும் அவர் மீது வழக்கு இருக்கிறது. இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தருமபுரி காவல் நிலையத்தில் அன்புமணி மீது வழக்கு உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில், சட்டம் ஒழுங்கை மீறி பொதுஇடத்தில் அனுமதியின்றி கூடியதாக தருமபுரி காவல் நிலையில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், அன்புமணி மீது அவதூறு வழக்கும் இருக்கிறது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி, அனுமதியின்றி பொது இடங்களில் கூடியதாக சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் அன்புமணி மீது வழக்கு உள்ளது. சட்டம் ஒழுங்கை மீறும் வகையில், அனுமதியின்றி கூடியதாக சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்திலும், வழக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியது தொடர்பாக கடந்த ஆண்டு எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.