கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சீமான் மீது வழக்கு
மதிமுக நிர்வாகி அளித்தப் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் செல்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றனர். சீமானை வரவேற்க நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும், வைகோவை வரவேற்பதற்காக மதிமுக தொண்டர்களும் திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது இருகட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கியும் கொண்டனர்.
இதனிடையே மோதல் சம்பவம் தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்நிலையத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் சோமு புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட் 5 பிரிவுகளின் கீழ் திருச்சி விமான நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வினோத் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.