வாக்குப்பதிவின்போது தாக்குதல் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
வாக்குப்பதிவின்போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற தேர்தலின்போது ராயபுரம் 49வது வார்டில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், கள்ள ஓட்டு போட்டுவிட்டு தப்பியோடியதாக ஒருவரை துரத்திப்பிடித்து அவரைத் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதுமட்டுமல்லாமல், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரை நிர்வாணத்துடன் திமுக பிரமுகரை அழைத்துவரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர்மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.