‘சர்கார்’திரையிட்ட திரையரங்குகள் மீது வழக்குப் பதிவு? - சி.வி.சண்முகம்
ஆலோசனைக்குப் பிறகு ‘சர்கார்’ படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்குப் பதியப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது.
முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிமனித ஓட்டுரிமையின் அவசியத்தையும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.
தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘சர்கார்’ படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்குப் பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மீது வழக்குப் பதியப்படும் எனவும் ‘சர்கார்’ படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்குப் பதியப்படும் எனவும் தெரிவித்தார்.