வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயில் பறிமுதல்... 3பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதைப் பொருள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் தனிப்படை போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 3 சிறிய கண்டைனர்களில் கஞ்சா ஆயிலும் அதனை பயன்படுத்த தேவையான உபகரணங்ளும் இருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குலசேகரத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், அருமனையை சேர்ந்த அனிஷ் மற்றும் நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்த பிரவீன் ஆகிய 3 பேரை கைது செய்ய போலீசார், அவர்களிடமிருந்த சொகுசு காரையும் கைப்பற்றினர்.
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது கஞ்சா ஆயிலை பெங்களூருவில் இருந்து சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்து கடத்தி வந்ததும் இதனை கள்ள சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.