துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத் திறனாளிகளுக்கு பெயர் வெளியிட விரும்பாத தொழிலதிபர் உதவி!
ஒவ்வொரு பேரிடரின் போதும் சக மனிதர்களுக்கு கை கொடுப்பது மனிதம் மட்டுமே என்பது நிரூபணமாகி வருகிறது. பெருந்தொற்று காலத்திலும் மனிதமே புதிய நம்பிக்கையை துளிர்க்க செய்கிறது.
உதவி கோருவோருக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் உதவி பெற்று வழங்கிவருகிறது 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை'. திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரத்தில் இரு தம்பதியினர் உணவின்றி தவித்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து திருப்பூரில் உள்ள HELPING HEART FOUNDATION அமைப்புக்கு தெரிவித்த அடுத்த கணமே, 2 குடும்பங்களுக்கும் 1 மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
சென்னையில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு துளிர்க்கும் நம்பிக்கை மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன. சென்னை வண்ணாரப்பேட்டை, ஏழுகிணறு, கொடுங்கையூர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சுமார் 600 கிலோ அரிசி, 12,500 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை 'துளிர்க்கும் நம்பிக்கை' இயக்கத்திற்கு வழங்கினார். அந்த தொழிலதிபர், தமது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர் அளித்த நிவாரணப் பொருட்கள், பாச்சல் பகுதியில் வசிக்கும் 8 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.