பிரதமர் வருகை: கருணாநிதி இல்லத்தில் கறுப்புக்கொடி!
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது ஒன்றுபட்ட எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கறுப்புச்சட்டை அல்லது கறுப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை வரவிருக்கும் பிரதமருக்கு அனைத்துக் கட்சியினரும் கறுப்புக் கொடி காட்டுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆழமான அதிருப்தியையும், ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பிரதமருக்கு தெளிவுபட உணர்த்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் தங்கள் இல்லங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கறுப்புச் சட்டை அல்லது கறுப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் காவிரி உரிமையை என்ன விலை கொடுத்தேனும் மீட்கும், இந்த உறுதியான போராட்டத்தில் முழு மூச்சுடன் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் உத்வேகத்துடன், இந்த கறுப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும், திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.