சண்டிகர் மேயர் தேர்தல்: 1 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி - மோசடி என ஆம் ஆத்மி புகார்

சண்டிகர் மேயர் தேர்தல்: 1 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி - மோசடி என ஆம் ஆத்மி புகார்
சண்டிகர் மேயர் தேர்தல்: 1 வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி - மோசடி என ஆம் ஆத்மி புகார்

சண்டிகர் மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜகவை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது அப்பட்டமான "ஜனநாயக படுகொலை" என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேயர் தேர்தலில் பாஜகவின் சரப்ஜித் கவுர் மற்றும் ஆம் ஆத்மியின் அஞ்சு கத்யால் இருவரும் பதிவான 28 வாக்குகளில் தலா 14 வாக்குகளைப் பெற்றனர், ஆனால் அஞ்சு கத்யாலுக்கு ஆதரவாக விழுந்த ஒரு வாக்கு செல்லாததாகத் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி செய்துள்ள ட்வீட்டில்,"இது அதிர்ச்சியூட்டும் ஜனநாயக படுகொலை, தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பெற்ற போதிலும், பாஜகவின் மேயர் சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் " என்று தெரிவித்தது

இது பற்றி பேசிய பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஜர்னைல் சிங்,"பாஜகவுக்கு சீட் குறைந்ததால் காங்கிரஸ் கவுன்சிலர் நேரடியாக பாஜகவில் இணைந்தார். அதற்குப் பிறகும் வாக்குகள் குறைந்ததால் அதிகாரவர்க்கத்தின் உதவியைப் பெற்று பாஜக வெற்றி பெற்றது. இது சரியான வாக்குகளை தவறாகக் காட்டி ஜனநாயகத்தைக் கொல்லும் முயற்சி. ஆம் ஆத்மியை தோற்கடிக்க பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே இரகசிய புரிந்துணர்வு உள்ளது என்பதற்கு இது சான்றாகும்" என்று கூறினார்.

கடந்த வாரம் முடிவுகள் வெளியான சண்டிகர் உள்ளாட்சித் தேர்தலில், மொத்தமுள்ள 35 வார்டுகளில் 14 வார்டுகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், அகாலி தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. அதன் பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் பாஜகவில் இணைந்தார்.

மேயரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில், 7 காங்கிரஸ் கவுன்சிலர்களும், அகாலிதளத்தின் ஒரு பிரதிநிதியும் வாக்களிக்காததால், 36 வாக்குகளில் 28 மட்டுமே பதிவாகின. மேயர் பதவி மட்டுமின்றி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளையும் பாஜக வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com