கோவை: பேரணியின்போது கடைகளை மூடச் சொன்ன பாஜகவினர்; எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கண்டனம்
கோவையில் நடந்த பாஜக இரு சக்கர வாகன பேரணியின்போது டவுன்ஹால் பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடக்கோரி பாஜக தொண்டர்கள் வலியுறுத்திய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற இருசக்கர வாகன பேரணி மற்றும் பரப்புரை கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பாஜகவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளை அடைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வர்த்தகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அளித்த புகாரில் அமைதியாக உள்ள கோவையில் வீணான பிரச்னைகளை தூண்டுவதாகவும், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் கோரியுள்ளனர். அதேபோல் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் வர்த்தகர்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டரிந்தார். பின்னர் வர்த்தகர்களுக்கு எதிரான பாஜகவினர் செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து மக்க்ள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டவுன்ஹால் பகுதிக்கு நேரில் சென்று வர்த்தகர்களை சந்தித்து சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை கண்டிப்பதாக தெரிவித்தார்.

