நவம்பர் 8-ம் தேதி ‘கருப்பு பண ஒழிப்பு தினம்’: பாஜக அறிவிப்பு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை, கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு அறிவித்தார். இந்த நாளை கருப்பு தினமாகக் கொண்டாட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வரும் நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நாளில் நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக சார்பில் நவம்பர் 8ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில், டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நவம்பர் 8-ம் தேதியைக் கருப்புப் பணஒழிப்பு தினமாக அனுசரிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.