நில வேம்பு குறித்து சினிமா பிரபலங்கள் வதந்தி: தமிழிசை ட்வீட்
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊறுசெய்யும் வகையில் சில சினிமா பிரபலங்கள் ஈடுபடுவது கண்டித்தக்கது என தமிழக பாரதிய ஜனதா தலைவரும், மருத்துவமருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நிலவேம்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், "டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஊறுசெய்யும் வகையில் சில சினிமா பிரபலங்கள் ஈடுபடுவது கண்டித்தக்கது. நிலவேம்பு குடிநீர், கஷாயம் ஆகியவை பருகுவதால் நோய் எதிர்ப்பு தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அவை பக்க விளைவுகள் இல்லாத மருந்தே என நிரூபணமாகியுள்ளது. சோதனைக் கூடத்தில் சில எலிகளுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகள் மக்கள் பயன்பாட்டில் எங்கேயும் நிரூபணம் ஆகவில்லை. நிலவேம்பு குடிநீர் பற்றி சித்த மருத்துவர்கள் மட்டுமின்றி, சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் மருத்துவ ஆய்வுகள் நடத்தியுள்ளது. பக்க விளைவுகள் இல்லாத மருந்து அலோபதியிலும் கிடையாது" என்று பதிவிட்டுள்ளார்.