தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது - தமிழிசை கண்டனம்
அரூர் அருகே மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குப்பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்று 5 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். அரூர் அருகேயுள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவியை அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஸ், ரமேஷ் என்ற இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி தலைத்துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் இப்படியொரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டரில், “அரூர் அருகே மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப்பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த நிகழ்ச்சி கண்டனத்துக்குரியது தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்துதண்டிக்கவேண்டும் வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.