வந்தார் ராம்நாத் கோவிந்த், வருகிறார் மீரா குமார்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆதரவு கோரினார்.
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண்ன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அவரிடம் ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்.
மதியம் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் அவர், மாலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்.பிக்களை சந்தித்து ஆதரவு கோருகிறார். மாலை 7.30 மணியளவில் தனி விமானம் மூலம் ராம்நாத் கோவிந்த் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமார் இன்று மாலை தமிழகம் வருகிறார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். முன்னதாக, பெங்களூரு சென்ற அவர், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை சந்தித்தார்.