சுற்றுச்சூழல் துறையில் பாஜக அரசின் சறுக்கல்கள் என்ன? சாதனைகள் என்ன?
கல்வித்துறையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடந்த பதிவில் பார்த்தோம். இப்போது சுற்றுச்சூழலில் பாஜக அளித்த வாக்குறுதிகள் என்ன? அவை எந்தளவுக்கு நிறைவேறின? எனப் பார்ப்போம்.
பாஜக ஆட்சிக்கு வரும்முன் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தது. அப்படியென்றால் இந்தியா எரிவாயு மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றிற்கு எண்ணெய் வளங்களை (fossil fuels) பயன்படுத்துவதை குறைத்திருக்கவேண்டும். ஆனால் மாற்று எரிசக்தி (renewable energy) மூலம் இந்தியா 13.4% தான் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
மேலும் பாஜக ஆட்சியில் மாசுக் கட்டுபாட்டிற்கு முன்னுரிமை தரப்போவதாக கூறியது. ஆனால் Global Burden of Disease 2017 அறிக்கையின்படி பார்த்தால் காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் இறப்பவர்கள் அதிகம் என்கிறது. உலக அளவில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது புள்ளிவிவரம். இதன்மூலம் மாசுக் கட்டுபாட்டிற்கு பாஜக அரசு போதிய முன்னுரிமை தந்துள்ளதா என சந்தேகம் எழும்புகிறது என்கிறனர் எதிர்க்கட்சியினர்.
அதேபோல, உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலகில் மாசு அடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாதான் அதிக நகரங்களைக் கொண்டுள்ளது. அதாவது முதல் 15 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
காடுகளை பராமரித்து, அதன்மூலம் கார்பன் அளவை குறைக்கப்போவதாக பாஜக அரசு தெரிவித்தது. ஆனால் India State of Forest Report 2015-2017 தரவின்படி பார்த்தால் இந்தியாவில் பல மாநிலங்களிலுள்ள காடுகளின் வளர்ச்சியின் அளவு குறைந்துள்ளது.
ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையோ பாஜக அரசின் ‘தேசிய காடு வளர்ப்பு திட்டம்’ (National Afforestation policy)நாட்டின் காடு வளர்ப்பிற்கு வழி வகுத்துள்ளது என்கிறது. இத்திட்டத்தின் மூலம் நாட்டில் காடு வளர்ச்சி 15%-17% ஆக உயர்ந்துள்ளதாக கூறுகிறது.
2018ஆம் ஆண்டு இறுதியில் கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலங்களில் திருத்தம் மேற்கொண்டது பாஜக அரசு. அதாவது கடலோரக் கட்டுபாட்டு மண்டலம் இனி கடல் பரப்பிலிருந்து 50 மீட்டர் தூரம்தான் இருக்கும் என வரைமுறை செய்தது. இந்தத் திருத்தத்தால் கடலோர பகுதிகளுக்கு மிக அருகில் தொழிற்சாலைகள் அமைக்க முடியும். ஆகவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதனைக் கடுமையாக விமர்சித்தனர். மேலும் இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்படையும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி, இந்தத் திருத்தத்தை எதிர்த்தனர்.
எனினும் சுற்றுச்சூழல் துறையில் பாஜக அரசு சில நல்ல திட்டங்களையும் வகுத்துள்ளது. 'e-Green Watch' என்ற இணையதள சேவையை ஆரம்பித்தது. இந்தத் தளத்தின் வழியே காடு வளர்ப்புக்கு செலவாகும் நிதியினை யாரும் நேரடியாக தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் இத்துறையில் ஒரு வெளிப்படைத்தன்மையை பாஜக கொண்டு வந்துள்ளது.
அதேபோல, காடுகள் அல்லாத இடங்களில் வளரும் மூங்கில் மரங்களை, மக்கள் தங்கள் பொருளாதார தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் காற்று மாசின் அளவை தெரிந்துகொள்ள 'சமீர்' (SAMEER)அப் அறிமுகபடுத்தியுள்ளது. ஆனால் இத்திட்டங்கள் போதிய அளவிற்கு பயனளிக்கவில்லை என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சரி, விவசாய துறையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?
(வெயிட் அண்ட் சி..)