“காங்கிரஸ் இல்லாத இந்தியா” : டார்கெட்டை ரீச் செய்யும் பாஜக
திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்ற உள்ள நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 20 ஆக தற்போது அதிகரித்திருக்கிறது.
இந்திய அரசியல் வரலாற்றில் 20 மாநிலங்களில் ஆட்சியை பிடித்து, பாஜக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 3 மாநில தேர்தல்களுக்கு முன்பு, பாரதிய ஜனதா கட்சி நேரடியாக 13 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் 6 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தது. கடைசியாக நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் தேர்தல்களில் பாஜக வெற்றி வாகை சூடியது. தற்போது நாகாலாந்தில் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளதோடு, திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சியை வீழ்த்தியுள்ளது.
தற்போதையை நிலவரப்படி புதுச்சேரி மற்றும் டெல்லி சேர்த்த 31 மாநிலங்களில் 20ல் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. மேகாலயா மாநிலத்தின் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 22 ஆக உயரும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய முக்கியமான பெரிய மாநிலங்களில் ஆட்சி புரிகிறது. இது தவிர சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, அசாம், கோவா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவின் ஆட்சியே உள்ளது.
ஆந்திரா, காஷ்மீர், பீகார், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாகலாந்தில் வெற்றிபெற்றுள்ள இக்கட்சி, அங்கு கூட்டணி ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை கர்நாடகா, பஞ்சாப், புதுச்சேரி, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி புரிந்துவருகிறது. அதில் மேகாலயாவில் ஆட்சியை தக்க வைத்துள்ளது காங்கிரஸ். தமிழகம், தெலங்கானா, ஒடிஷா, டெல்லி, மேற்கு வங்காளம், திரிபுரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.