‘2019 நாடாளுமன்ற தேர்தல்’ - பாபா ராமிடம் நேரில் ஆதரவு கோரினார் அமித்ஷா
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்குமாறு யோகா குரு பாபா ராம் தேவ்வை நேரில் சந்தித்து அமித்ஷா ஆதரவு கோரினார்.
வருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக ‘சம்பார்க் ஃபார் சமர்தன்’ (சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்) என்ற திட்டத்தை பாஜக வகுத்துள்ளது. அதன்படி, பாஜக தலைமை 50 முக்கிய பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவது. அதோடு, பாஜகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்த்து ஒட்டுமத்தமாக ஒரு லட்சம் பேரை சந்தித்து மோடி அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்ட வேண்டும் என்ற திட்டத்தையும் அக்கட்சி உருவாக்கியுள்ளது. இவர்கள் குறைந்த பட்சம் 10 பேரையாவது சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.
‘சம்பார்க் பார் சப்போர்ட்’ திட்டத்தின்படி பாஜக தலைவர் அமித்ஷா பல்வேறு பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ராணுவ தளபதி தல்பீர் சிங், கபில் தேவ், சட்ட வல்லுநர் சுபாஷ் காஷ்யப் ஆகியோரை சந்தித்த அமித்ஷா இன்று குரு பாபா ராம் தேவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பாஜக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து ராம் தேவிடம் அமித்ஷா எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “ஆதரவு திரட்ட பாபா ராம் தேவிடம் வந்தேன். நான் சொன்னதையெல்லாம் அவர் அமைதியாக கேட்டுக் கொண்டார். எங்களுடைய பணிகள் குறித்து எடுத்துரைத்தேன். பாபா ராம் தேவ் உதவி செய்தால், அவரது கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களை எங்களால் சென்றடைய முடியும்” என்று கூறினார்.
மேலும், “2014ம் ஆண்டு எங்கள் உடன் இருந்தவர்களின் ஆசிர்வாதத்தை பெற வேண்டுகிறோம். நாங்கள் ஒரு லட்சம் மக்களை சந்திக்க உள்ளோம். மேலும் ஒரு கோடி குடும்பங்களை சென்றடைவோம்” என்றார்.