குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்: பாஜக எம்பி கருத்தால் பரபரப்பு
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று பாஜக எம்.பி. சஞ்சய் காகடே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி சஞ்சய் காகடே புனேவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, குஜராத்தில் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜகவுக்கு கிடைக்காது. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டும் அளவுக்கு வெற்றிபெறும். எனது இந்த கணிப்பானது அந்த மாநிலத்தில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் விளைவாகும். நான் 6 பேர் அடங்கிய ஒரு குழுவை குஜராத்துக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் மாநிலத்தின் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு சென்று விவசாயிகள், ஓட்டுநர்கள், தொழிலாளர்களிடம் கருத்து கேட்டனர். அவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையிலேயே குஜராத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகிறேன்.
பாஜக 22 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 25 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதைபோல் வேறு எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும் தொடர்ந்து ஆட்சி செய்ததில்லை. குஜராத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு எதிரான கருத்துக்களால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் பாஜக தலைவர்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசவில்லை. அதற்கு பதிலாக காங்கிரசை விமர்சிப்பதிலும், உணர்ச்சி பொங்க வாக்காளர்களுக்கு கோரிக்கை வைப்பதிலுமே தீவிரமாக இருந்தனர். அனைத்தையும் கடந்து பாஜக வெற்றி பெற்றால் அதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான் இவ்வாறு அவர் கூறினார்.