இடைத்தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி முகம்: குறைந்தது மக்களவை பலம்
2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 315 இடங்களை தன் வசம் வைத்திருந்தது. கூட்டணி கட்சிகள் உடன் இருந்தாலும் மெஜாரிட்டிக்கு தேவையாக இடங்களுடன் இருப்பது பாஜகவும் பெரிய பலமாக இருந்தது. இதனால், எந்தக் கட்சியையும் பாஜக எதிர்பார்க்க தேவையில்லை என்ற நிலை இருந்தது. அப்படியொரு வலுவான கட்சியாக 2014ல் உருவெடுத்த பாஜக அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது.
இருப்பினும், சமீபகாலமாக இடைத் தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. ஒரு புறம் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்தாலும், மறுபுறம் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு தோல்வி தொடர்ந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் 3 மக்களவைக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் பாஜக தோற்றது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர் என அதன் இடைத்தேர்தல் தோல்வி தொடர்ந்தது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு பின்னடைவாகவே அமைந்துள்ளது. 11 சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 4 மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒன்றில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தன் வசம் இருந்த மூன்று தொகுதிகளில் இரண்டினை பாஜக இழந்துள்ளது.
இடைத்தேர்தல் தோல்வியால் மக்களவையில் பாஜகவின் எண்ணிக்கை 272 ஆக குறைந்துள்ளது. இன்னும் தனது மெஜாரிட்டியை பாஜக தக்க வைத்துள்ளது. இருப்பினும், தனிப்பெரும் மெஜாரிட்டியை காட்டிலும் பாஜகவுக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளது. இன்னும் ஒராண்டு ஆட்சி உள்ள நிலையில், மேற்கொண்டு வரும் இடைத்தேர்தல்களின் வெற்றி தோல்வியை பொறுத்து இதுவும் மாறும்.
2014ம் ஆண்டு முதல் 2018ம் வரை நடைபெற்ற 27 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 5 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 27 தொகுதிகளில் 13 பாஜக வசம் இருந்தவை. வெற்றி பெற்ற 5 இடங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. இதில், 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் தலா இரண்டு இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 2015, 2017ம் ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. 2018ம் ஆண்டும் தற்போது வரை ஒரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்றும் அக்கட்சியால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஒன்று சேர்ந்தன. அதேபோல், தான் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றியை தழுவியுள்ளது. சிவசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. இதனால், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நெருக்கும் வேளையில் பாஜகவுக்கு இந்த் தோல்விகள் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.