கடந்த 2016ஆம் ஆண்டு பெயர் குறிப்பிடப்படாத அமைப்புகளிடம் இருந்து பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு 646 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகள், கடந்த 2016ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் அளித்த தகவல்களை, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016ஆம் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த நன்கொடை 570. 86 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பெயர் குறிப்பிடப்படாத அமைப்புகளிடமிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு 460. 78 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 261. 56 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது. அதில், பெயர் குறிப்பிடாத அமைப்புகளிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்கு 186. 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு குறைவாக நன்கொடை வழங்கப்பட்டால், நிதி வழங்குபவரின் விவரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. இவ்வாறு பெறப்படும் நன்கொடை பெயர் குறிப்பிடப்படாத அல்லது தனிநபர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியாகக் கருதப்படும்.