“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!
“மம்தாவுக்கு எதிரான 'மிஷன்22‌' ஆபரேஷன்” - வென்றது பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக பெறாது என்று மம்தா கூறிய நிலையில் 18 இடங்களை பாஜக பெற்றுள்ளது. 

மேற்கு வங்கத்தில் கடந்த முறை திரிணாமூல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாரதிய ஜனதாவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. ஆனால், அப்போது முதலே மேற்கு வங்கத்தில் அடுத்த தேர்தலில் கணிசமான வெற்றியைக் குறிவைத்து களமிறங்கி விட்டது பாரதிய ஜனதா. 

திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து பாரதி‌ய ஜனதா மீது கடும் கோபத்தை திருப்பினார் மம்தா. அதைப் பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா, மம்தா ஆட்சியை சாரதா, நாரதா என்று கூறி நக்கலடிக்கத் தொடங்கியது. அப்போது முதல் பற்றிக் கொண்ட பகைமை. மேற்கு வங்கத்தில் ‌பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை உருவெடுக்கச் செய்தது.

மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைதியாக பின்தங்கிவிட, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் 'மிஷன் 22‌' எனக் குறிவைத்து களமிறங்கி தீவிர பரப்புரை செய்தனர். மம்தாவும் தன்னால் முடிந்தளவு பிரதமர், அமித் ஷா மீது அனலை கக்கினார். பரப்புரை கூட்டங்களுக்கு தடங்கல்,‌ ஹெ‌லிகாப்டர் தரையிறங்கத் தடை என்றெல்லாம் தாண்டவமாடினார். 

உச்சகட்டமாக கொல்கத்தாவில் நடந்த அமித் ஷா பேரணியில், வங்காள தத்துவ மேதை வித்யா சாகரின் சிலை உடைக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. அதற்கும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்ட நிலையில், 7 கட்டத் தேர்தலும் சில பல அசம்பாவித சம்பவங்களுடனே நடந்து முடிந்தது. அதன் முடிவிலும் பாரதிய ஜனதாவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றார் மம்தா. ஆனால், நேற்று வெளியான தேர்தல் முடிவில், மொத்தமுள்ள 42 இடங்களில் பாரதிய ஜனதா 18 இடங்களைப் பிடித்துள்ளது. 

மம்தா அரசின் பிடிவாதப் போக்கு‌, குண்டர்கள் ராஜ்ஜியம் ஆகியவற்றால் தலையெடுக்க முடியாமல் தவிக்கும் இடதுசாரி கட்சித் தொண்டர்கள், மம்தாவை வீழ்த்த பாரதிய‌ ஜனதாவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சித் தலைவர்கள் சிலரே தெரிவித்தனர். அதன்படியே 18 சதவிகிதம் வாக்கு பெற்றிருந்த பாரதிய ஜனதா, இந்தத் தேர்தலில் 39 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com