‘நாதுராம் கோட்சே தேசபக்தரா?’ - பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேபோல், ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, நாதுராம் கோட்சே குறித்த கமலின் பேச்சுக்கு பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் இன்று எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தேசபக்தராகவே இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறியுள்ளார். மேலும், கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யா சிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்றார்.