அதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக
உத்தரப்பிரதேசத்தை அடுத்து பாஜகவிற்கு மேற்கு வங்கத்தில்தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றத்தை தொடர்ந்து பாஜக தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அக்கட்சி தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்து மேற்கு வங்கத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, “தற்போது மேற்கு வங்கத்தில் 54 லட்சம் புதிய உறுப்பினர்கள் உள்ளனர். இது உத்தரப்பிரதேச மாநில உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நடைபெறும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நிறைவடைந்தவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் மேற்கு வங்கம் வரவுள்ளனர். அவர்கள் இருவரும் மேற்கு வங்க பாஜக உறுப்பினர்களிடம் உரையாற்றவுள்ளனர்.
வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் 200 இடங்களை பிடிக்க திட்டமிட்டுள்ளோம். அப்போது தான் நாங்கள் யாருடைய துணையும் இன்றி தனியாக ஆட்சியமைக்க முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் உறுப்பினர்களின் வீட்டிற்கு விருந்திற்கு சென்று வருகின்றனர். இது பிரசாந்த் கிஷோர் பாஜகவிற்கு ஆலோசகராக இருந்த போது அவர் எங்களிடம் இருந்து கற்றுக் கொண்டது. அதை தான் அவர் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கூறி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.