வீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்

வீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்
வீர மரணமடைந்த அதிகாரியைக் கொச்சைப்படுத்தி பேசிய பாஜக வேட்பாளர்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த ஐபிஎஸ் அதிகாரி ஹெமந்த் கார்காரே தான் விட்ட சாபத்தால்தான் இறந்தார் என பாஜகவின் போபால் வேட்பாளர் சாதவி பிரக்யா தாகூர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா தாகூர் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில் இன்று அவர் கூட்டத்திற்கு உரையாற்றும் வீடியோ ஒன்று வெளியானது. 

அதில் அவர், “நான் ஹெமந்த் கார்காரேவை அழைத்து, மாலேகான் குண்டு வெடிப்பில் என் மீது ஆதாரங்கள் இல்லை என்றால் என்னை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டேன். இதற்கு கார்காரே என் மீதான ஆதரங்களைக் கொண்டுவருவதாக கூறினார். அத்துடன் என்னை வெளியே விடவும் மறுத்துவிட்டார். இதனால் நான் கார்காரேவை பார்த்து  ‘இவர் பாழாய் போவார்’ என சபித்தேன்” எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலர் தங்களின் எதிர்ப்பை பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கண்டனம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் “பயங்கரவாதிகளுடன் துணிச்சலுடன் போராடி தனது உயிரை இழந்தவர் ஹெமந்த் கார்காரே ஐபிஎஸ். இவரின் இந்தச் செயலுக்கு இந்திய அரசு அசோக சக்ரா விருது வழங்கியது. இந்த மாதிரி நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அதிகாரியை பற்றி வேட்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளது கண்டனத்திற்கு உரியது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை மதிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையிலுள்ள காமா மருத்துவமனையின் வெளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஹெமந்த் கார்காரே, அசோக் காம்டே மற்றும் விஜய் சலாஸ்கர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இந்த வீரமரணத்தை கௌரவிக்கும் விதமாக ஹெமந்த் கார்காரேவிற்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. 

பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் மீது மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் அவர் விசாரணையை சந்தித்து வருகிறார். தற்போது இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com