100 கோடி தரேன் ! அமைச்சர் பதவி தரேன்: பாஜக மீது குமாரசாமி குற்றச்சாட்டு

100 கோடி தரேன் ! அமைச்சர் பதவி தரேன்: பாஜக மீது குமாரசாமி குற்றச்சாட்டு

100 கோடி தரேன் ! அமைச்சர் பதவி தரேன்: பாஜக மீது குமாரசாமி குற்றச்சாட்டு
Published on

100 கோடி ரூபாய் தருகிறேன் அமைச்சர் பதவி தருகிறேன் என எம்எல்ஏக்களுக்கு பாஜக ஆசை காட்டுவதாக குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி (113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் அமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.

இந்நிலையில் இன்று மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சி தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, பாஜவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கர்நாடகாவில் கூட்டணி அமைக்கப்படும் என குமாரசாமி தெரிவித்தார். இதற்கிடையில் அக்கட்சி கூட்டத்தில் 2எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, தேர்தல் முடிவு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லை.பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கட்சியை உடைப்பதற்கு பாஜக‌ தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேகாலயா, மணிப்பூர், கோவாவில் தனிப்பெரும்பான்மை பெறாமலேயே பாஜக ஆட்சியமைத்தது. கோவா, மணிப்பூர் வழியில் போதிய ஆதரவு இல்லாமலேயே ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கிறது. பெரும்பான்மை இல்லாத சூழலில் பாஜக ஆட்சியமைக்கும் என பிரதமர் மோடி கூறுவதை கண்டிக்கிறேன் எனக் கூறினார்.

மேலும், பாஜகவின் சூழ்ச்சியை கர்நாடக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.100 கோடி ரூபாய் தருகிறேன்; அமைச்சர் பதவி தருகிறேன் என எங்கள் எம்எல்ஏக்களுக்கு ஆசை காட்டுகிறது பாஜக.குதிரை பேரத்தில் பாஜக ஈடுபடும் நிலையில் வருமானவரித்துறை என்ன செய்கிறது?எனக் கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை; காங்கிரசுடன் மட்டுமே கூட்டணி. அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டுநலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்.குதிரை பேரம் நடைபெறுவதை ஜனாதிபதியும் ஆளுநரும் அனுமதிக்கக்கூடாது என்றார்.


2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டணி என நான் எடுத்த முடிவு என் தந்தையின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக இருக்கிறது. எனவே இந்த கறுப்புப் புள்ளியை அகற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே நான் காங்கிரஸ் உடன் செல்கிறேன் எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com