மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி - கோட்டைவிட்டது காங்கிரஸ்

மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி - கோட்டைவிட்டது காங்கிரஸ்
மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி - கோட்டைவிட்டது காங்கிரஸ்

மேகாலயாவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சியின் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் கட்சி உரிமை கோரியுள்ளது.

முன்னதாக நேற்றிரவு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், அகமது படேல் மற்றும் சி.பி ஜோஷி ஆகியோர் ஆளு‌நர் கங்கா பிரசாத்தை சந்‌தித்து, காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்கள். இந்நிலையில், சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட தனது கூட்டணி கட்சிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரியுள்ளது. தமக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும், மற்றவை 14 இடங்களிலும் வெற்றி கண்டன. பெரும்பான்மைக்கு மொத்தம் 31 இடங்கள் தேவையான நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டப்பேரவை நிலவுகிறது.

பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் தேசிய மக்கள் கட்சி அங்கமாக இருக்கிறது. இந்த கட்சிகள் வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் 21 மட்டுமே. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 10 தொகுதிகள் தேவையாக இருந்த நிலையில், ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி(யுடிபி) தேசிய மக்கள் கட்சிக்கு இன்று மதியம் தனது ஆதரவை தெரிவித்தது. 6 எம்.எல்.ஏ.க்களை தன் வசம் வைத்துள்ள யுடிபி கட்சி தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது மிகப்பெரிய திருப்பு முனையாக மாறியுள்ளது. காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று என்று யுடிபி கட்சி தலைவர் ராய் கூறினர். 4 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட மக்கள் ஜனநாயக கூட்டணி, தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தேசிய மக்கள் கட்சியின் தேர்தலுக்கு பின் அமைத்துள்ள கூட்டணி நிலவரம்:-

தேசிய மக்கள் கட்சி - 19

பாரதிய ஜனதா - 2

ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி(UDP) - 6 

மக்கள் ஜனநாயக முன்னணி(PDF) - 4 

தேசிய மலைவாழ் மக்கள் ஜனநாயக் கட்சி(HSPDP) - 2 

சுயேட்சை - 1

தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் மக்களவை சபாநாயகர் பிஏ.சங்கமாவின் மகனுமான கொன்ராட் சங்கா முதலமைச்சராக ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும், கான்ரட்-ன் சகோதரி  அகதா சங்மா முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் தேசிய மக்கள் கட்சி மார்ச் 6 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைக்க கோரியுள்ள பட்சத்தில் காங்கிரஸுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய புதிய கூட்டணியை பாஜக சாத்தியபடுத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த ஜனநாயக கட்சி தலைவர் ராயின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தான் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் முகுல் சங்மா ராயின் இல்லத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய உடனேயே, பாஜகவின் வடகிழக்கு மாநில பொறுப்பாளர் ஹிமந்த பிஸ்வா சர்மா அங்கு சென்றார். தங்களது ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது பாஜக தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டு வெற்றியை சாதித்துள்ளது. 

ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதற்கு ராகுல் காந்தியின் பொறுப்பின்மையும் காரணமாக கூறப்படுகிறது. இப்படியொரு இக்கட்டான நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார். கமல்நாத் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களை பொறுப்பாளர்களாக நியமித்து இருந்தார். ஆனால், அரசியலில் சாதுர்யமாக காய் நகர்த்தி பாஜக முன்னேறி சென்றுள்ளது. 

ஏற்கனவே திரிபுராவில் பெரும்பான்மையுன் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, நாகாலாந்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதை உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது, மேகாலயாவிலும் கிட்டதட்ட ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com