மகாராஷ்டிரா: ஆட்சியை பிடித்தாலும் தொகுதியில் சறுக்கிய பாஜக..!

மகாராஷ்டிரா: ஆட்சியை பிடித்தாலும் தொகுதியில் சறுக்கிய பாஜக..!

மகாராஷ்டிரா: ஆட்சியை பிடித்தாலும் தொகுதியில் சறுக்கிய பாஜக..!
Published on

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ள போதிலும், கடந்த தேர்தலில் பெற்றதை விட இந்த ஆண்டு குறைவான தொகுதிகளையே பெற்றுள்ளன.

மகாராஷ்டிராவில் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தனியாக எதிர்கொண்ட பாஜக - சிவசேனா கட்சிகள், இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்கின. ஆனாலும், கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இந்த இரு கட்சிகளும் குறைவான தொகுதிகளையே கைப்பற்றியுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 260 தொகுதிகளில் போட்டியிட்டு 122 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 152 தொகுதிகளில் போட்டியிட்டு, 102 தொகுதிகளில் கைப்பற்றும் நிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, கடந்த தேர்தலில் 282 தொகுதிகளில் தனித்துப்போட்டியிட்டு 63 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருக்கும் சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிட்டு, 57 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்த பாஜக-சிவசேனா 185 இடங்கள் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. இந்த ஆண்டு ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்த பாஜக-சிவசேனா கூட்டணி, 159 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை பொருத்தவரை, இந்த தேர்தலில் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டதால், ஆட்சி கிடைக்காவிட்டாலும், கூடுதலாக சில தொகுதிகள் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த தேர்தலை தனியாக எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, 287 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 42 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்த தேர்தலில் 145 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ‌47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 278 தொகுதிகளில் போட்டியிட்டு 41 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தேர்தலில் 123 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 53 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com