சந்திரசேகர் ராவ் கடந்து வந்த பாதை என்ன?

சந்திரசேகர் ராவ் கடந்து வந்த பாதை என்ன?

சந்திரசேகர் ராவ் கடந்து வந்த பாதை என்ன?
Published on

தெலங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். யார் இந்த சந்திரசேகர் ராவ்? அரசியலில் கடந்து வந்த பாதை என்ன?

கலவகுண்ட்லா சந்திரசேகர் ராவ். இதுதான் கேசிஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரசேகர் ராவின் முழுப்பெயர். மேடக் மாவட்டத்தில் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்த சந்திரசேகர் ராவின் அரசியல் பயணம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடங்கியது. பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து என்டி ராமாராவ் அமைச்சரவையிலும் அடுத்து சந்திரபாபு நாயுடு அமைச்சரவையிலும் இடம் பெற்றார். 2001ம் ஆண்டு தெலுங்கு தேசத்திலிருந்து விலகி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை தொடங்கினார் கேசிஆர். தெலங்கானா மாநில போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார். 

பல்வேறு போராட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்த இவர் 2009ம் ஆண்டு நடத்திய 11 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் மூலம் அதிகபட்ச நெருக்கடியை கொடுத்தார். இதையடுத்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி தெலங்கானா மாநிலம் உருவானது. அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். இந்நிலையில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் போதே அதிரடியாக சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை எதிர்கொண்டார் சந்திரசேகர ராவ். 

குடும்பத்தினருக்கு கட்சியில் முக்கியத்துவம் தருகிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது வைக்கப்பட்டது. வலுவான காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் கூட்டு சேர்ந்து மெகா கூட்டணி அமைத்த போதும் சந்திரசேகர் ராவ் அபார வெற்றி பெற்றார். தேர்ந்த அரசியல் வியூகமும் விவசாயிகள், ஏழைகள், சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களுமே இவரின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் எனக் கூறப்படுகிறது. தெலங்கானா வெற்றியை தொடர்ந்து தேசிய அளவிலும் முத்திரை பதிக்க சந்திரசேகர ராவ் இலக்கு வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com