துரோகம் என்றுமே வெற்றி பெறாது: டி.ராஜேந்தர் பேட்டி
துரோகம் என்றுமே வெற்றி பெறாது என்பதற்கான உதாரணம்தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. 4வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோருக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவு குறித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது மாயை என கூறிய அவர், டிடிவி தினகரனின் முன்னிலை யாருக்கெல்லாம் பின்னிலை என்பதைத் தெளிவுப்படுத்தியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், “துரோகம் என்றுமே வெற்றி பெறாது என்பதற்கான உதாரணம்தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள். இந்த இடைத்தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கலாம். ஆனால், ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அது சாத்தியமாகாது. அதனால் டிடிவி சரித்திரம் படைப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. தலை இல்லாததால் தமிழக அரசியல் களத்தில் யார் யாரோ வந்து செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.