ஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.!

ஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.!
ஐபிஎல் 2020: கேப்டன்களின் சொதப்பலான முடிவால் மாறிப்போன ஆட்டங்கள்.!

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அணிகளின் கேப்டன்கள் மேற்கொண்ட சில முடிவுகள் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அவர்களின் முடிவு சர்ச்சையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை. கேப்டன்களின் தவறான முடிவு அணிகளை தோல்விக்கு தள்ளியிருக்கிறது. இதனால் சில அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி என்றால் மிகையல்ல.

சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் தேர்வில் இருந்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவை போட வைத்தது வரை தோனி எடுத்த முடிவுகள் எல்லாமே மோசமாகவே இருந்தது. அதிலும் இந்தத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 62 ரன்களை மட்டுமே எடுத்துள்ள கேதர் ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது போன்ற தவறுகள் தோனி மீதான விமர்சனம் எழுந்ததற்கு காரணமானது. மேலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்பு இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது அபத்தமாக இருப்பதாக முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்ஸை பயன்படுத்திய விதம் பெரும் விவாதமானது. அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் "லெக் ஸ்பின்னர்" பந்துவீச்சில் கொஞ்சம் திணறிதான் விளையாடுவார். டிவில்லியர்ஸ் விக்கெட்டை பாதுகாக்க வேண்டும் என எண்ணத்தில் கோலி அவரை பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 6 ஆவது பேட்ஸ்மேனாக களமிறக்கினார். அந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகாமல் போகவே அப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.

பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரலை மும்பைக்கு எதிரான போட்டியில் தவறாக பயன்படுத்தினார். அந்தப் போட்டியில் காட்ரலின் 4 ஓவர்களை விரைவாகவே முடித்துவிட்டார். அதேபோல முகமது ஷமியின் ஓவரும் முடிந்துவிட்டது. இதனையடுத்து களத்தில் ஹர்திக் பாண்ட்யாவும், பொல்லார்டும் இருக்கின்றனர். அப்போது கடைசி ஓவரை வேறு வழியில்லாமல் சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்ப கவுதமிடம் கொடுத்தார். அந்த ஓவரில் அதிகபட்ச ரன்களை மும்பை குவித்தது. இதுவும் இந்த ஐபிஎல் தொடரில் மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது.

பெங்களூரு அணி 12 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும். களத்தில் டிவில்லியர்ஸ் இருக்கிறார். அப்போது ஒரு மோசமான முடிவை ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எடுக்கிறார். அப்போது அணியில் இருக்கும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் ஓவரை கொடுக்காமல் ஜெயதேவ் உனாத்கத்துக்கு கொடுத்தார். டிவில்லியர்ஸ் தாறுமாறாக பேட்டை சுழற்ற பெங்களூரு வெற்றிப்பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com