மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வேண்டாம்: கமல்ஹாசன்
மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தமது ஆதரவாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் மகளிர் தின பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இன்று மாலை 4 மணியளவில் மகளிர் தின பொதுக்கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடக்கவுள்ளது. 3000 பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் ஒருங்கிணைத்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில், கமல்ஹாசன் உரையோடு, பங்கேற்கும் பெண்கள் உடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு வருமாறு ட்விட்டரில் கமல் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் பதாதைகளைத் தவிர்க்குமாறு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.