பெங்களூர் vs ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை: பலம், பலவீனம் என்ன?
இன்றைய ஐபிஎல் போட்டிகளில் மோதும் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பலம் பலவீனம் குறித்த அலசல்
விளையாடிய 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் பற்றி பார்ப்போம். அதிரடியாக நடப்பு சீசனை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசியாக விளையாடிய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சறுக்கலைச் சந்தித்துள்ளது. முந்தைய போட்டியில் சோபிக்கவில்லை எனினும், ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து மேல் வரிசையில் நம்பிக்கையளிக்கின்றனர். பட்லர் ஓரளவு ஃபார்முக்கு வந்துள்ளது அணிக்கு ஆறுதல். உத்தப்பா, இளம் வீரர் ரியான் பராக் ஆகியோர் பொறுப்பின்றி விளையாடி வருவது பலவீனம். ஆல்ரவுண்டர்கள் தெவாதியா, டாம் கரண் மத்திய வரிசையில் பக்கபலம். பந்து வீச்சாளர்களில் ஆர்ச்சர் மட்டுமே வலுசேர்க்கிறார். மற்றவர்கள் அதிகளவில் ரன்களை வாரி வழங்குவது அணிக்கு பெரும் சிக்கல்.
பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் டிவில்லியர்ஸ், ஃபின்ச், படிக்கல் பெரும் பலமாக உள்ளனர். கேப்டன் கோலியின் திணறல்களும் , சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ரன்களை வாரி வழங்குவதும் அணிக்கு பெரும் பெரும் பின்னடைவு. வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்புயல் சைனி பந்து வீச்சில் அணிக்கு தூணாக வலம் வருகின்றனர். ஆல்ரவுண்டர் ஷிவம் தூபே பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பியுள்ளது ஆறுதல். கோலியும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டால் பெங்களூர் அணி மேலும் வலுப்பெற்று ஃப்ளே ஆஃப்க்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.