“மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தேர்தல் முடிவுகள்” - மாயாவதி
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிராக தேர்வுகள் முடிவுகள் வந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மயாவதியும், அகிலேஷ் யாதவும் இணைந்து அமைத்த மெகா கூட்டணி அதிக அளவில் தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கெனவே, அம்மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்.பி ஆக இருந்த தொகுதியிலே சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருந்தது. அதனால், இந்தக் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பிரதமர் பதவியை ஏற்க தயார் என்னும் அளவிற்கு மாயாவதி நம்பிக்கையை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. பாஜக கூட்டணி 61 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் - சமாஜ் வாடி கூட்டணி 18 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிராக தேர்வுகள் முடிவுகள் வந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மேலும், ‘தன்னாட்சி அமைப்புகள் அரசுக்கு மண்டியிட்டுள்ள வேளையில் மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.