“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்?

“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்?
“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்?

அயோத்தி வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பாஜக, சங்பரிவார் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப் பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. 

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை மீண்டும் ஒத்தி வைத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீண்டகாலமாக அயோத்தி வழக்கு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் தள்ளிப் போயுள்ளது. வழக்கு விசாரணை ஒத்தி போனதை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக, சங் பரிவார் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

காங்கிரஸ் கட்சியின் அழுத்தம் காரணமாகவே இந்த விவகாரம் காலதாமதமாகி வருவதாக பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார் கூறியுள்ளார். கபில் சிபில், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்து இந்த வழக்கை தாமதப்படுத்துகின்றனர் என்று அவர் விமர்சித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவட் வலியுறுத்தியுள்ளார். “இது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது. அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்”  என்று அவர் கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக இந்த விவகாரத்தை கையிலெடுப்பது தொடர் கதையாகிவிட்டது என்று மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

“காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. உச்சநீதிமன்றம் முடிவு சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். அவசரப்படக் கூடாது. அவசர சட்டம் தேவை என்று குரல்கள் எழும் போது, அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். அவர் எந்த விவகாரத்திற்கும் பதில் சொல்வதில்லை” என்றார் ப.சிதம்பரம்.

“அவர்களுக்கு தைரியம் இருந்தால் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அவசர சட்டம் கொண்டுவர எங்களை பார்த்து பயந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அவர்களால் கொண்டுவர முடியவில்லை சொல்லுங்கள்?” என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். 

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், “அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்காக இந்துக்கள் காத்திருக்க முடியாது. ராமருக்கு உடனடியாக கோயில் கட்ட வேண்டும் என அரசினை வலியுறுத்துவோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com