காலையில் இவற்றைத் தவிர்த்தால் இன்பமே!

காலையில் இவற்றைத் தவிர்த்தால் இன்பமே!

காலையில் இவற்றைத் தவிர்த்தால் இன்பமே!
Published on

அலாரத்தை 5 நிமிடம் 10 நிமிடம் என மாற்றி வைப்பதை தவிர்த்திடுங்கள்!

அலாரத்தை மாற்றி மாற்றி வைக்கும்போது தினமும் தூங்கும் தூக்கத்தின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். கஷ்டப்பட்டு எழுந்திருக்க வேண்டியதாகும். சுறுசுறுப்பு இருக்காது. இதனால் நாள்முழுதும் ஒருவிதமான சோர்வும் தடுமாற்றமும் இருக்கும். காலையில் இன்னும் கொஞ்சநேரம் தூங்கலாம் என யோசிக்கும்போதே உங்களுடைய நம்பிக்கையையும் கனவுகளையும் வேலைகளையும்கூட சேர்த்தே தள்ளி வைக்கிறீர்கள். எனவே புத்துணர்வு வேண்டுமானால் Znooze பட்டனை அழுத்தாதீர்கள்.

எழுந்தவுடன் மொபைலைத் தேடவேண்டாம்!

பெரும்பாலானவர்கள் போனை தலையணைக்கு அடியிலோ, கைக்கு எட்டும் தூரத்திலோதான் வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள். நாளை நன்றாகத் துவங்க வேண்டுமானால் வேறு ஏதேனும் ஒரு வேலையை செய்யும்முன்பு போனைத் தொடக்கூடாது. இமெயில், மெசேஜ் என வேலை சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதை சிறிது நேரம் ஒத்தி வைப்பதில் தவறில்லை. கண்களைத் திறந்தவுடன் செல்போன் ஒளியைப் பார்ப்பது நல்லதல்ல. அதுமட்டுமல்லாமல் பிடிக்காத நபரையோ, செய்தியையோ பார்த்துவிட்டால் அந்த நாள் நலமானதாக இருக்காது.

உடலை சுருட்டி படுக்கவேண்டாம்!

காலையில் கண் விழித்தவுடன் சிலருக்கு மீண்டும் சுருண்டு படுக்கும் பழக்கம் இருக்கும். இரவில் நாம் தூங்கும்போது முதுகுத் தண்டுவடத்தில் சில திரவங்கள் சுரக்கும். இது முதுகு தண்டை வலிமையாக்கும். இதனால்தான் காலையில் சில சென்டிமீட்டர் வளர்ந்து இருப்பதைப் போன்று தோன்றும். திடீரென சுருளும்போது முதுகில் வலி உண்டாகும். எனவே காலையில் உடலை நேராக நீட்டி, பிறகு எழுந்திருக்க வேண்டும். இதனால் தசைப்பிடிப்புகள் நீங்கி வலுவாகும். மேலும் மன அழுத்தத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

காலையில் படுக்கையிலிருந்து நன்றாக கைகளை நீட்டி விரித்து எழுந்திருப்பவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், உடலை மடக்கி குப்புறப்படுத்து எழுந்திருப்பவர்கள் அதிக மன உளைச்சலுடன் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலுக்கு நீர் தேவை!

இரவு முழுவதும் தூங்கினதால் 7-8 மணிநேரம் தண்ணீர் குடிக்காமல் உடல் வறண்டு போயிருக்கும். எனவே காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியம். இது காலையில் கண்விழிக்க உதவுவது மட்டுமில்லாமல் உடலில் மெட்டோபாலிஸத்தையும் அதிகரிக்கிறது. 

வெறும் தண்ணீர் குடிக்க விரும்பாதவர்கள் சீரகத் தண்ணீர், எலுமிச்சைத் தண்ணீர் குடிக்கலாம். இது கல்லீரலை சுத்திகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள், உடல் எடை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், வாய் துர்நாற்றத்தைப் போக்குதல், மூளையின் செயல்திறனை அதிகரித்தல் போன்ற பணிகளையும் செய்கிறது.

ஆனால் ஐஸ் தண்ணீரைக் குடிக்காமல் சாதாரணத் தண்ணீரைக் குடிக்கவேண்டும். காலையில் குடிக்கும் ஐஸ் தண்ணீர் உடல் பாகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

காலையில் காபி குடித்தல்

ஒரு கப் காபி இல்லாவிட்டால் நாளை துவக்க முடியாது என பலர் சொல்வதுண்டு. ஆனால் காலையில் புத்துணர்ச்சியை அதிகரிக்கும் கார்ட்டிஸோல் என்ற ஹார்மோன்கள் 8-9 மணி வரை அதிகமாக சுரக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு அல்லது அந்த நேரத்தில் காபி குடித்தால் அது கார்ட்டிஸோலின் சுரப்பை குறைக்கும். எனவே காலையில் லெமன் வாட்டரைக் குடித்துவிட்டு 9.30 மணிக்குமேல் காபி குடிக்கலாம்.

படுக்கையை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்!

காலை எழுந்தவுடன் படுக்கையை மடித்து அடுக்கி வைப்பது சிலருக்குப் பிடிக்கும். சிலர் அப்படியே கலைந்த நிலையிலேயே விட்டுவிடுவர். மேலும் சுத்தமான பெட்ஷீட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம். அழகாக மடித்து அடுக்கினாலும் அழுக்காக இருந்தால் அதில் பூச்சிகள் குடியேறிவிடும்.

எனவே வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது பெட்ஷீட் மற்றும் தலையணை உறைகளை துவைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது நிம்மதியான தூக்கத்தையும், காலையில் எழும்போது உற்சாகத்தையும் தரும். 

வெளிச்சம் அவசியம்!

சிலருக்கு காலை எழுந்தவுடன் லைட்டை போடுவது பிடிக்காது. மங்கலான வெளிச்சத்திலேயே ஆபீஸுக்கு தயாராகும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இதனால் உடலின் பாகங்கள் இருட்டில் இருப்பதைப் போன்றே உணரும். ஆனால் உடலுக்கு வெளிச்சம் மிக அவசியம். இல்லாவிட்டால் நாள்முழுதும் ஒருவித சோர்வும், உற்சாகமின்மையும் காணப்படும்.

உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்!

உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! ஆனால் காலை நேரப்பயிற்சி மிகவும் நன்மை தரும் என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மாலைநேரம் வேலை முடித்துவிட்டு பயிற்சியில் இறங்கும்போது பல எண்ணங்களும், நாள்முழுதும் நடந்த செயல்களும் மனதில் ஓடி, சரியாக பயிற்சி செய்யமுடியாமல் தடுக்கும். காலைநேர பயிற்சி நாள்முழுதுக்குமான வேகத்தைக் கொடுக்கும்.

குளிக்கும் தண்ணீரில் கவனம்!

சுடுதண்ணீரில் குளிப்பது தசைகளை ரிலாக்ஸ் செய்வதோடு, இதயத் துடிப்பையும் சீராக்குகிறது. ஆனால் நன்றாக தூக்கம் வரும். காலையில் ஜில்லென்ற தண்ணீரில் குளித்தால் சிலிர்ப்பாக இருக்கும். தூக்கம் கலையும். இது ஹார்மோன்களை தட்டி எழுப்புவதோடு, மூளை, நரம்பு மண்டலத்தில் செயலாற்றி ஒருவித மனநிம்மதியை தருகிறது. 

தொலைபேசியில் பேசுதல்

பெரும்பாலானவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் தொலைபேசியை எடுத்து மற்றொருவருடன் பேசப் பிடிக்காது. சிலமணிநேரம் அமைதியான செயல்களில் ஈடுபடவே விரும்புவர். காலை 9 மணிக்குமேல் யாரையும் தொடர்புகொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. யாரையேனும் அழைக்கவேண்டுமானால் முதலில் அவருக்கு விஷயத்தை எடுத்துச் சொல்லி மெசேஜ் அனுப்பவேண்டும். அவர்களுடைய நேரத்தைக் கேட்டுப் பிறகு கால் செய்து பேசுவதே முறையானது.

டிவி பார்க்கவேண்டாம்!

காலையில் எழுந்தவுடன் சிலருக்கு கை டிவி ரிமோட்டைத் தேடும். ஆனால் நன்கு தூங்கிய பிறகு டிவி திரையைப் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல. அதுமட்டுமல்லாமல் அதிர்ச்சியான தகவல்கள் சிலருடைய நாளையே கெடுத்துவிடும். முடிந்தவரை அருமையான இசையைக் கேளுங்கள்!

எல்லா நாளும் இனிதே துவங்கட்டும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com