பாஜக அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு
தேசியக் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் பாஜக தலைமையிலான அசாம் அரசினை விமர்சித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக குடியேறியவர்களை இனம் பிரித்து பார்ப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அம்மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்தப் பதிவேட்டைத் தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக 1.9 கோடி பேர் அடங்கிய தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அசாம் மாநில அரசு தயாரித்து வரும் தேசியக் குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அசாம் அரசின் நடவடிக்கையை மம்தா பானர்ஜியும் விமர்சித்துள்ளார். பிர்பும் மாவட்டத்தில் அகமெத்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “அசாம் மாநிலங்களில் இருந்து பெங்காலி பேசும் மக்களை வெளியேற்றும் முயற்சி இது. பாஜக தலைமையிலான அசாம் அரசு நெருப்போடு விளையாடுகிறது. பெங்காலிகள் அசாமில் இருந்து வெளியேற்றப்பட்டால் நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என்று கூறினார். மம்தா பானர்ஜியின் கருத்து உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று அசாம் பாஜக அரசு குற்றம்சாட்டியது.
இதனையடுத்து குவாஹத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தைலேந்திர நாத் தாஸ் என்பவர், மம்தா பானர்ஜிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மக்களிடையே மொழி, மதம் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதனையடுத்து மம்தா மீது அசாம் மாநில காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.