அசாம் 2-ம் கட்ட தேர்தலில் 39 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு

அசாம் 2-ம் கட்ட தேர்தலில் 39 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு
அசாம் 2-ம் கட்ட தேர்தலில் 39 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு

39 தொகுதிகளுக்கான அசாம் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடக்கிறது.

126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்.1) நடைபெறுகின்றது.

26 பெண் வேட்பாளர்கள் உள்ளிட்ட 345 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். 13 மாவட்டங்களில் உள்ள 39 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 10,000-க்கும் அதிகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு தொடங்குகின்றது.

வேட்பாளர்களை பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி 37 வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 28 வேட்பாளர்களையும், அசாம் ஜத்திய பரீஷத் கட்சி 19 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளன. முக்கிய கட்சிகளை தவிர 176 சுயேச்சைகளும் களத்தில் நிற்கின்றனர்.

சுமார் 73,44,000 வாக்காளர்கள் களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் தலையெழுத்துகளை நிர்ணயிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

அசாம் மாநிலத்தின் தற்போதைய அமைச்சர்களாக உள்ள பரிமல் சுக்லா உள்ளிட்ட 4 அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சும் ரோஹன்ஹேங, பாரதிய ஜனதா கட்சியில் வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேச்சையாக களமிறங்கும் அசாம் மாநில சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் அமினுல் ஹக்காவ் ஆகியோர் களம் காணும் தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா 3 பேரணிகளையும், மத்திய அமைச்சர்களாக உள்ள முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு பாரதிய ஜனதா கட்சியின் கைகளை மாநிலத்தில் நடைபெறக்கூடிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேரத்தில் வலுப்படுத்தி உள்ளனர். அதேநேரத்தில், ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைக்கான கடைசி நாளான நேற்றைய தினம் அசாம் மாநிலத்தில் 3-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரப்புரைகளில் அனல் கூட்டியிருந்தார்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா கட்சியும், இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் மிகத் தீவிரமாக பரப்புரை செய்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com