ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை

ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை

மேற்கு வங்கத் தேர்தலில் முஸ்லிம்கள் மற்றும் மாதுவாஸ் ஆகிய இரு சமூகங்கள் பெரும்பாலும் முக்கிய வாக்கு வங்கிகளாகப் பேசப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் சுமார் 30 சதவீத வாக்காளர்களாக உள்ளனர். அவர்களைப் போலவே மாதுவாஸ் எனப்படும் மாதுவாக்கள் குறிப்பிடத்தக்க சதவீத வாக்காளர்களாக உள்ளனர். மாதுவாஸ் மக்கள் தொகை சுமார் 2 கோடி (சுமார் 30 சதவீதம்) என கூறப்படுகிறது, இருப்பினும், மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசின் கூற்றுப்படி, இந்த மக்கள் 15 முதல் 20 சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு 24 பர்கானாக்கள், நதியா, முர்ஷிதாபாத் மற்றும் தினாஜ்பூர் (வடக்கு மற்றும் தெற்கு) உட்பட நான்கு முதல் ஐந்து மாவட்டங்களில் இந்த சமூகம் பரவியுள்ளது.

வைஷணவைத் (வைணவம்) இந்துக்களின் ஒரு பிரிவு மாதுவாக்கள். இந்த சமூகம் 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஹரிச்சந்த் தாகூர் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் நமோசூத்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தச் சமூகத்தினர் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட வரலாறு உண்டு. இந்துக்களிடையே ஒரு சிறுபான்மைக் குழுவான மாதுவாக்கள், பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் குடியேறினர். இந்து அகதிகளாக இருக்கும் இம்மக்களின் ஆதரவை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கு (டி.எம்.சி) எதிராக திருப்பி, அதன்மூலம் ஆட்சியமைக்க பாஜக நினைத்து, அந்த சமூக தலைவர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறது.

அதேபோல், திரிணாமுல் காங்கிரஸும் அவர்களை அணுகுவதில் ஆர்வமாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில், மாதுவா சமூகத்தின் வாக்கு வங்கியை பெற பாஜகவுக்கும் டிஎம்சி-க்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களை போலவே, முஸ்லிம்கள் வாக்கு வங்கிதான் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை தீர்மானிப்பதில் ஒரு பெரிய முக்கிய காரணியாக இருக்கக்கூடும். பல தசாப்தங்களாக, முஸ்லிம்கள் இடது முன்னணியின் வாக்கு வங்கியாக கருதப்பட்டனர். நாட்டின் பிற பகுதிகளில் முஸ்லிம் சார்பு பிம்பத்தை காங்கிரஸ் வித்தியாசமாக வளர்த்துக்கொண்ட போதிலும், மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்கு வங்கியின் இடது விசுவாசத்தை காங்கிரஸால் உடைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆள முடிந்தது.

ஆனால், சிங்கூர் மற்றும் நந்திகிராம் போராட்டங்களின்போது திரிணாமுல் காங்கிரஸ் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோருடன் ஏழை முஸ்லிம்களை அணிதிரட்டி போராட்டத்தில் வெற்றிகண்டது. அதன்பிறகு, 2010-ல் வந்த சச்சார் கமிஷன் அறிக்கை, வங்காள முஸ்லிம்கள் பொருளாதார மற்றும் சமூக அளவுருக்கள் மீது மோசமான நிலையில் இருப்பதாக குழு கண்டறிந்தது உட்பட பல காரணங்களால் இடதுசாரிகள் வசம் இருந்த முஸ்லிம் வாக்கு வங்கி திரிணாமுல் கட்சிக்கு சென்றது.

இதெல்லாம் முன்பு உள்ள நிலை. தற்போது, முஸ்லிம் வாக்குகளுக்கான புதிய போராட்டம் மேற்கு வங்கத்தில் காணப்படுகிறது. முஸ்லிம் அடையாளத்தை ஆதரிக்கும் இரண்டு முக்கியத் தலைவர்கள் களத்தில் உள்ளனர். ஹூக்லி மாவட்டத்தின் செல்வாக்குமிக்க ஃபர்ஃபுரா பார்பர் ஷெரீப்பின் இளம் போதகரான பிர்சாதா அப்பாஸ் சித்திக் மற்றும் ஏஐஎம்ஐஎம் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தான் அந்த இரு தலைவர்கள்.

அப்பாஸ் சித்திக்:

அப்பாஸ் சித்திக், அவரைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பைஜான் என்று பிரபலமாக அறியப்பட்டவர். முதலில் அப்பாஸ் சித்திக் தலைமையில்தான் ஏஐஎம்ஐஎம் சேருவதாக இருந்தது. அதற்கேற்பவே அப்பாஸ் சித்திக் தன்னை "ஒவைசியின் ரசிகர்" என்று அறிவித்திருந்தார். ஆனால் காங்கிரஸ், இடதுசாரி அழைக்கவே, அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

இடது - காங்கிரஸ் கூட்டணியுடன் கூட்டணி வைக்க அப்பாஸ் சித்திக் எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஓவைசி வங்கத் தேர்தலில் தனியாகப் போராடுவதாக அறிவித்துள்ளார். தற்செயலாக, மேற்கு வங்கத்தில் ஓவைசி கட்சியின் விரிவாக்கம் இப்போது தடைபட்டுள்ளது. எனினும், ஓவைசி உருது மொழி பேசும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.

அப்பாஸ் சித்திக் பொறுத்தவரை கட்சித் தொடங்கும்போது பழங்குடியினர் மற்றும் தலித் தலைவர்களையும் இணைத்துக் கொண்டார். தெற்குபர்கனா, வடக்கு பர்கனா, ஹூக்ளி, புர்த்வான், ஹவுரா, பிர்பும் போன்ற தெற்கு வங்க மாவட்டங்களில் இவருக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அவரது வேண்டுகோள் பெரும்பாலும் முஸ்லிம்களிடம் உள்ளது. “என்னை நேசிப்பவர்கள்” கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டு வருகிறார். இதனால் முஸ்லிம் வாக்குகள் பெற தற்போது மும்முனை போட்டி உருவாகி உள்ளது. ஆம், இதில் திரிணாமுல் காங்கிரஸும் முஸ்லிம் வாக்குகளை பெற போட்டி போட்டு வருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான இடங்களை வென்ற போதிலும், முந்தைய 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம்களின் வாக்குகள் ஐந்து சதவீதம் அதிகமாகவே திரிணாமுல் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. அதேநேரத்தில், இந்துக்கள் அதிகமாக பாஜகவுக்கு வாக்களிக்க, அதுவே 18 இடங்களை வென்றெடுக்க உதவியது. 2014 மக்களவைத் தேர்தலை விட 2019-ல் பாஜக 27 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தல்களில் அப்பாஸ் சித்திக் திரிணாமுல் பக்கம் இருந்தார். ஓவைசி காலூன்றவே இல்லை. ஆனால், நிலைமை இப்போது அப்படி அல்ல. அப்பாஸ் சித்திக் மற்றும் ஓவைசி இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றனர்.

இருவரும் மேற்கொள்ளும் மிகவும் தீவிரமான இருப்பு மற்றும் பிரச்சாரம் முஸ்லிம் வாக்கு வங்கியில் மும்முனை போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் சித்திக், குறிப்பாக இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய நபராக இருக்க வாய்ப்புள்ளது. அவரது ஃபர்ஃபுரா தர்பார் ஷெரீப் வங்காளத்தில், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் மிகவும் பிரபலமான இஸ்லாமிய பிரிவான அஹ்லே சுன்னத்துல் ஜமாஅத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறது.

பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் வருகையை கண்ட பிராந்தியமும் இதுதான். சட்டவிரோத இடம்பெயர்வு தொடர்பாக பல ஆண்டுகளாக பாஜக பேசி, எதிர்த்து வருகிறது. இதனால் அவர்களின் வாக்கு பாஜவுக்கு செல்லாது. அதேநேரத்தில், அந்த வாக்குகள் அப்பாஸ் சித்திக் மற்றும் ஒவைசி ஆகியோருக்கு செல்வதாக இருந்தால், பாஜக சந்தோஷப்படும். காரணம், ஆட்சியை, வெற்றியை தீர்மானிக்க கூடிய முஸ்லிம்கள் மற்றும் மாதுவாஸ் சமூகத்துக்கு மத்தியில், மாதுவாஸ்க்கு குடியுரிமை தரப்படும் என பாஜக பிரசாரம் செய்து அவர்களின் வாக்குகளை கவர்ந்து வருகிறது. இனி பாக்கி இருப்பது முஸ்லிம்கள்தான். முஸ்லிம்கள் வாக்குகளை இந்த இருவரும் பிரித்து, அது மம்தாவுக்கு கிடைக்காமல் போய்விட்டால் நிச்சயம் அது பாஜகவுக்கு வெற்றியை ஈட்டித்தரும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com