காவல் ஆணையரை விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதோடு, மத்திய அரசுக்கு எதிராக சிபிஐ செயல்பாட்டிற்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
கெஜ்ரிவால் தனது ட்விட்டரில், “மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு பேசினேன். என்னுடைய ஆதரவை அவருக்கு தெரிவித்தேன்.மோடி - அமித்ஷாவின் நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சந்திரபாபு நாயுடு, “இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலமைப்பு சட்டம் மற்றும் கூட்டாட்சி முறையின் மாண்பை பாதுகாக்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடன் துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைமர் உமர் அப்துல்லாவும் தன்னுடைய ஆதரவை மம்தா பானர்ஜிக்கு தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சிபிஐ உள்ளிட்ட நிறுவனங்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.