இறந்தவரை தகனம் செய்த இடத்தில் எரிந்த நிலையில் இளைஞரின் உடல்!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மயானத்தில் எரிந்து கொண்டிருந்த சிதையின் மீது மற்றொருவர் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள சோழராஜபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்ற ஓட்டுனர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது சடலத்தை மதுரை சாலையில், காயல் குடி ஆறு அருகே உள்ள மயானத்தில் உறவினர்கள் நேற்று தகனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை 2 வது நாள் காரியத்திற்காக வந்து பார்த்த போது, சிவக்குமார் எரிந்த சிதையில் மற்றொரு நபர் கருகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில் அவர் செவல்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி ராம்சிங் என்பது தெரிய வந்தது. கடந்த 2 தினங்களாக மனம் உடைந்து பிதற்றி வந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் இருந்து சென்றவர் திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை டி.எஸ்.பி நாகசங்கர் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வடக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.