பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த முதியவர் உயிரிழப்பு... சேலத்தில் சோகம்.
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் முதியவர் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது வரை முழுமை அடையவில்லை. பல்வேறு பகுதிகளில் இன்று வரையில் பாதாள சாக்கடைக்காக குழிகளை தோண்டி, பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்பேட்டை பகுதியிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல் பணியை மேற்கொள்வதற்காக பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்த தண்ணீரை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது குழியினுள் ஆண் சடலமொன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து செவ்வாய்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (60) என்பதும், நேற்றிரவு வீட்டிலிருந்து அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இரவு முழுவதும் தனசேகரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்து தேடிவந்த நிலையில் தனசேகர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.