“ஆமைக்கறி சாப்பிட்டேன்; ஏகே 74 சுட்டேன்” - சீமான் மீண்டும் உறுதி
புதிய தலைமுறையின் ‘அக்னிப்பரீட்சை’ நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளான 60 ஆயிரம் யானைகள் பயணம், ஆமைக்கறி உணவு போன்ற கேள்விகளுக்கும் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
கேள்வி: 60 ஆயிரம் யானைகள், ஆமைக்கறி உணவு போன்ற மேடைப்பேச்சுகள் உங்களின் புள்ளிவிவரங்களுடன் கூடிய நல்ல விஷயங்களை பாதிக்கிறதா?
“நாம் மேடைகளில் பேசுவதற்கு முன்பு படிக்கிறோம். சில குறிப்புகள் எடுக்கிறோம். அதை வைத்து தான் மேடைகளில் பேசுகிறோம். வரலாற்றை கற்பிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. என்னை குற்றம் சொல்பவர்களுக்கு என் தரப்பில் இருந்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டது. அது குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மைதான். அதை மறுக்க வேண்டுமென்றால் விடுதலை புலிகள்தான் மறுக்க வேண்டும்.”
கேள்வி: ஆனால், விடுதலை புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்களும், நெருக்கமான சில அமைப்புகளுமே உங்களின் பேச்சுகளை விமர்சனம் செய்கிறார்களே?
“குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் 8 நிமிடம் மட்டுமே விடுதலை புலிகளுடன் இருந்தேன். அதை மறுக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகள்தான் மறுக்க வேண்டும். நான் 8 நிமிடம்தான் இருந்தேன் என்பதை என்னை குற்றம் சாட்டுபவர்கள் பார்த்தார்களா? பயணம் செய்தவன் நான். நான்தான் நடந்ததை கூற வேண்டும். நான் ஏகே 74 சுட்டேன். ஆமைக்கறி சாப்பிட்டேன். அதைத்தான் கூறுகிறேன். எனக்குப் பணம் வருவதாக கூறுகிறார்கள். குற்றம் சாட்டுபவர்களுக்கு பணம் வராத போது எனக்கு மட்டும் பணம் வருவது ஏன்? எனக்குப் பணம் வருகிறது என்றால் குற்றம் சாட்டுபவர்களுக்கும் வர வேண்டும் தானே? பணம் வருகிறது என்று சொல்வதெல்லாம் இனத்தையே கொச்சைப்படுத்தும் செயல். இது காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுபவை. காயப்படுத்தி நம்மை களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான வேலை.