ரூபாய் 1618 கோடி பணம் மற்றும் தங்கம் பறிமுதல் : முதலிடத்தில் தமிழகம்
தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததிலிருந்து நேற்று வரை நாடு முழுவதும் உரிய ஆவணம் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல், வருகின்ற 11 ஆம் தேதி தொடங்குகிறது, 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே, தமிழகத்தின் தான் பணமும், தங்கமும் அதிக அளவில் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில் புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இதுவரை 137 கோடியே 81 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 141 கோடி ரூபாய் மதிப்புள்ள, 942 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை அடுத்து அண்டை மாநிலமான ஆந்திராவில் 95 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 28 கோடி 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. நாடு முழுவதும், ஆயிரத்து 618 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில், சென்னை, வேலூர் மாவட்டம் காட்பாடி, கோவை, தருமபுரி மாவட்டம் அரூர் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.