\
அதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா?

அதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா?

அதிமுக - அமமுக இணைப்பை பாஜக விரும்புகிறதா?
Published on: 

அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைய வேண்டும் என பாரதிய ஜனதா விரும்புவதாக டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜக-வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே அதிமுகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைய வேண்டும் என பாரதிய ஜனதா விரும்புவதாக டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ இப்போதைய அதிமுகவை நம்பி தேர்தலை சந்தித்தால் தோல்வியை தழுவோம் என பாஜக எண்ணுகிறது. இது காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்பதால் அதிமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய வேண்டும் என பாஜக எண்ணுவதாக ஒரு செய்தி உலா வருகிறது. அதிமுக- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தால் நல்லதுதான். அதிமுக- அமமுக பிரிந்திருந்தால் திமுக கூட்டணி வெற்றிபெற்றுவிடுமோ என்ற எண்ணத்தில் பாஜக காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள்.” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். அவர் பேசும்போது, “ தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து. ஏற்கெனவே முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றனர். கழகத்தில் இணைந்தால் அவர்களை எந்த நேரத்தில் சேர்த்துக் கொள்வோம் என கூறியிருக்கின்றனர்” என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com