“மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமர் ஆவார்” - டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுகவுக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் பொதுச் சின்னத்தை ஒதுக்கியது. தேர்தல் ஆணையம் ஒதுக்கிய பரிசுப்பெட்டி சின்னத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 59 அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அமமுகவினர் மற்றும் தினகரன் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், திருப்பூரில் அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்தை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், காங்கிரஸ் கட்சி உதவியுடன் மாநிலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளது எனக் கூறினார். மேலும், ‘எந்தத் தேசிய கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; மாநில கட்சிகளே பிரதமரை தேர்ந்தெடுக்கும்’ என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே, தாங்கள் காட்டும் நபர் தான் பிரதமர் ஆவார் என்று தினகரன் கூறிவந்தார். அதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் யார் என்பதை தாங்கள் தீர்ப்பானிப்போம் என்று தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு நிச்சயம் ஆதரவு இல்லை என தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அப்படியென்றால், காங்கிரஸ் வெற்றிபெறும் பட்சத்தில் அதற்கு ஆதரவு அளிக்க தினகரன் தயாராக உள்ளதையே அவரது பேச்சு தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.

