சின்னம் கிடைப்பதற்கு முன்பே பரப்புரையை தொடங்கிய சாருபாலா தொண்டமான்
அமமுக சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாருபாலா தொண்டமான் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.
மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். பேருந்து நிலையம் எதிரே உள்ள டீ கடைக்கு சென்ற சாருபாலா தொண்டைமான், அங்கிருந்த பணியாளர்களுடன் உரையாடி வாக்கு சேகரித்தார்.
அமமுகவுக்கு வாய்ப்பளித்தால், கிடப்பில் உள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும், மூடிக்கிடக்கும் சிறு குறு நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அமமுக கட்சியை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், அந்தக்கட்சிக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படாத வேளையில் சாருபாலா தொண்டைமான் பரப்புரையை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை தினகரன் நேற்று முன் தினம் அறிவித்தார்.