எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னையை ஒதுக்கியது அமமுக

எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னையை ஒதுக்கியது அமமுக
எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னையை ஒதுக்கியது அமமுக

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 10 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து மக்களவை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. 

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது. 

அதேபோல், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

இதனிடையே, எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டுமே இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்து இருந்தார். அதேபோல், சில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதிக தொகுதிகளை கேட்டதால் அந்த கட்சிகளை நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. திமுக சார்பில் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com